லாம்பும் மின்சாரமும் (Lamp and Electricity)
என் சிறு பிராயத்தின் அதிகளவு நாட்கள் என் உம்மும்மா வீட்டிலேயே கழிந்தது. என் 9 வயது வரை (1996) உம்மும்மா வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் புறக்கணிப்பே அந்த உள் வீதிக்கு மின்னிணைப்பு வழங்கப்படாமைக்கு காரணம் என என் உம்மப்பா புலம்புவது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. உம்மும்மாவிடம் நிறைய லாம்புகள் இருந்தன. பத்துக்கு மேல் என்று நினைவு. பெரிய வீடாகையால் அந்தளவு லாம்புகள் தேவைப்பட்டன. அவை செம்பாலான லாம்புகள். பார்க்க பள பள என்றிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை உம்மும்மா லாம்புகளை சவர்க்காரமிட்டு கழுவி துடைத்து வைப்பார். ஒவ்வொரு நாளும் மாலையில் லாம்புகளுக்கு மண்ணண்ணெய் ஊற்றி வைப்பார் உம்மும்மா. உறவினர் சிலரின் வீடுகளில் போத்தல்களினால் செய்யப்பட்ட குப்பி லாம்புகளும் பழைய பbல்பினால் செய்யப்பட்ட லாம்புகளும் இருந்தன. சிம்னி வகை லந்தர் லாம்புகள், லைடர் லாம்புகள் என பல வகைகளில் காணப்பட்டன. இவை அந்தக் கால பொக்கிஷங்கள். இவ்வளவு காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு சிம்னி லாம்பும் 5 மாதங்களுக்கு முன்னர் தான் துருப்பிடித்தும் உடைந்தும் இருந்ததால் குப்பைக்குச் சென்றது.