லாம்பும் மின்சாரமும் (Lamp and Electricity)

என் சிறு பிராயத்தின் அதிகளவு நாட்கள் என் உம்மும்மா வீட்டிலேயே கழிந்தது. என் 9 வயது வரை (1996) உம்மும்மா வீட்டிற்கு மின்சாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அரசியல் புறக்கணிப்பே அந்த உள் வீதிக்கு மின்னிணைப்பு வழங்கப்படாமைக்கு காரணம் என என் உம்மப்பா புலம்புவது இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது.

உம்மும்மாவிடம் நிறைய லாம்புகள் இருந்தன. பத்துக்கு மேல் என்று நினைவு. பெரிய வீடாகையால் அந்தளவு லாம்புகள் தேவைப்பட்டன. அவை செம்பாலான லாம்புகள். பார்க்க பள பள என்றிருக்கும். வாரத்துக்கு ஒரு முறை உம்மும்மா லாம்புகளை சவர்க்காரமிட்டு கழுவி துடைத்து வைப்பார். ஒவ்வொரு நாளும் மாலையில் லாம்புகளுக்கு மண்ணண்ணெய்
 ஊற்றி வைப்பார் உம்மும்மா.

உறவினர் சிலரின் வீடுகளில் போத்தல்களினால் செய்யப்பட்ட குப்பி லாம்புகளும் பழைய பbல்பினால் செய்யப்பட்ட லாம்புகளும் இருந்தன. சிம்னி வகை லந்தர் லாம்புகள், லைடர் லாம்புகள் என பல வகைகளில் காணப்பட்டன. இவை அந்தக் கால பொக்கிஷங்கள். 


இவ்வளவு காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த எங்கள் வீட்டு சிம்னி லாம்பும் 5 மாதங்களுக்கு முன்னர் தான் துருப்பிடித்தும் உடைந்தும் இருந்ததால் குப்பைக்குச் சென்றது. 

அந்தக் காலத்தில் லாம்பு வெளிச்சத்தில் படிப்பது முதல் சமைப்பது வரை அத்தனை வேலைகளும் செய்யப்பட்டன. ஆனால் இன்று மின்சாரம் துண்டிக்கப்படும் போது அன்று எவ்வாறு லாம்பு வெளிச்சத்தில் வாழ்ந்தார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது. 

படித்தோம், நிலவின்  ஒளியில் விளையாடினோம், தாத்தாமார்களுடன் கதைகள் பேசினோம், பிள்ளைகள் வளர்ந்தனர். அப்போது என் இரண்டாவது மாமாவின் மூத்த மகனுக்கு இரண்டு வயது. அவன் துள்ளித் திரிந்ததும் லாம்பு வெளிச்சத்தில் தான்.

பெரிய சூழ்களைப் பற்ற வைத்துக் கொண்டு அண்டை வீடுகளுக்கு இரவில் சென்றோம். அவை அன்றைய இனிமையான பொழுதுகள். மறக்க முடியாத பொக்கிஷங்கள். ஆனால் இன்று இரவில் மின்சாரம் துண்டிக்கப்படும் போது கண்ணைக் கட்டுகிறது. 

உம்மும்மா வீட்டு முற்றம் பெரியது. ஆற்று மணல் பரப்பப்பட்டது. அழகானது. தரையில் அமர்ந்து விளையாடலாம். அந்த முற்றத்தில் இரவில் எல்லோரும் அமர்ந்து மாமாவின் லொறியின் பெட்டரியைப் பொறுத்தி டீவி யில் படங்கள், நிகழ்ச்சிகள், செய்திகள் பார்த்து மகிழ்ந்த நினைவுகள் பசுமையானவை. அந்தக் காலம் இனிமேல் வா என்றாலும் வராது. நாடு போகும் போக்கில் ஒருவேளை வந்தாலும் வரலாம். 

என் பத்து வயதில் உம்மும்மா வீட்டிற்கும் மின்சாரம் வந்து விட லாம்புகள் மூட்டை கட்டப்பட்டு பரனுக்குச் சென்றன. நாமும் புது வரவுக்கு அடிமையானோம். மின்சாரம் இன்றேல் வாழ்க்கை சூனியம் போல் ஆனது.

கைத்தொலைபேசிகளும் வர வீட்டிலுள்ளவர்களுடன் கதைக்க நேரம் இல்லாது போனது. இயந்திரமயமாகிப் போனோம். 

இன்றைய மின்சாரத் துண்டிப்பு ஆரம்பத்தில் எனக்கு சலிப்பைத் தந்தாலும் தற்போது பிள்ளைகளுடன் விளையாடவும் பழங் கதைகள் பேசிடவும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசவும் பயன்படுத்தி வருகிறேன்.

எனினும் தொடர்ந்தேர்ச்சையான மின்சாரத் துண்டிப்பு எதிர்காலம் பற்றிய பயத்தையே அதிகரித்துள்ளது.

இன்று குப்பி லாம்புகள் இல்லை. அவற்றுக்கு ஊற்ற மண்ணண்ணெயும் இல்லை. மெழுகுவர்த்திகள் நீண்ட நேரம் தாங்காது. விலையும் உயர்வு. சாஜர் டோச்களும் சாஜர் பல்புகளுமே ஒளி பாய்ச்சுகின்றன.  மின்சாரம் இன்றிய வாழ்வு சிரமம் தான். 

புது யுகம் படைக்க வேண்டிய நூற்றாண்டில் மீள பழைய யுகத்துக்கே போய்க் கொண்டிருக்கிறோம். 

- ஜெம்ஸித் -

புராதன லாம்புகளும் மின்சாரத்தின் வருகையும் வீடியோ

  

Comments

Post a Comment

Popular posts from this blog

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

சாரைப்பாம்பு! (Rat Snake)

மாட்டு வண்டியிலே! (Cart Jurney)