எனக்கொரு வீடு வேண்டும் ( I want a house)
எனக்கொரு வீடு வேண்டும். அதில் தென்னை மரங்களுடன் முக்கனிகள் சூழ ஏனைய பழ மரங்களும் காய்த்துக் கனிய வேண்டும். அதில் நானும் என் பிள்ளைகளும் சுற்றத்தாரும் பறவை பட்சிகளும் உண்டு மகிழ வேண்டும்.
இவ்வரிகளைப் பார்த்ததும் பாரதியாரின் காணி நிலம் வேண்டும். பராசக்தி காணி நிலம் வேண்டும்.....என்ற கவிதை உங்கள் மனக்கண் முன் வந்து செல்லும்.
ஆம்.. பாரதியாரின் கனவு போலத்தான் என் கனவு இல்லமும் அமைய வேண்டும் என ஏங்கிக் கொண்டிருக்கின்றேன். அதற்கான முயற்சிகளையும் நான் செய்து வருகின்றேன். எனினும் நாட்டின் இறுக்கமான நிலைமைகள் என் பயணப் பாதையில் மண்ணை வாரிப் போட்டுள்ளது. இது எப்போது சரியாகும் என நானறியேன். நாடு போகிற போக்கைப் பார்த்தால் மண்ணாலான ஓலைக் குடிசை கூட கட்ட முடியுமா என சந்தேகமே!
நான் பிறந்து வளர்ந்த வீடும் என் கனவு மாளிகையை ஒத்ததே. என் வாப்பாவின் கைப்பட வரைந்த வரைபடத்தைக் கொண்டு கட்டப்பட்டதே என் பிறந்தகம். என் வீட்டுக்கான வரைபடமும் எனதும் என் துணைவரதும் கருத்தொப்ப வரையப்பட்டுள்ளது.
நான் பிறந்து வளர்ந்த வீட்டைச் சூழ தென்னை மரங்கள் அமைந்துள்ளன. அத்தோடு மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஏனைய பழ மரங்களான மர முந்திரிகை, ஜம்பு, கொய்யா, வெரலு, ஸ்டார் புருட், அம்பரல்லா, அனோதா, சீத்தாப்பழம், தோடை, பேபி நாரங், மாதுளை என பட்டியல் நீள்கிறது.
இவை எல்லாம் எனது வாப்பாவின் கைப்பட நடப்பட்டவை. வாப்பா எம்மை விட்டுப் பிரிந்து நான்கு வருடங்களானாலும் அவர் நட்ட மரங்களும் அவற்றின் கனிகளும் அவரின் இருப்பை ஊர்ஜிதம் செய்கின்றன.
ஒருவர் ஒரு மரத்தை நட்டு அதிலிருந்து மனிதனும் பறவை பட்சிகளும் பயனடையும் காலம் எல்லாம் அந்த நன்மை அவர் மரணித்த பின்னரும் அவரைச் சென்றடையும் என்ற நபிகளாரின் வாக்கை மரங்களுடனான பிணைப்பு நினைவுபடுத்திச் செல்கிறது.
மனிதன் உயிர்ப்புடன் வாழ மரங்களின் பங்கு அளப்பரியது. பழ மரங்கள் கொண்ட என் வீட்டுச் சூழலில் பறவைகளின் இன்னிசை காதுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். காலையில் சுபஹ்
பாங்கோசையின் பின்னர் குருவிகளினதும் அணிலாரதும் கீச் கீச் சத்தம் செவிகளுக்குள் ஊடுருவி அன்றைய நாளை இனிமையாக்குகின்றது.
அணில், மைனா, புல்புல் என்பன அங்குமிங்கும் பாய்ந்தும் பறந்தும் செல்லும் அழகை இரசித்த வண்ணம் தேநீர் ஒரு கப் அருந்தப் பாக்கியம் கிடைத்தவர்களுக்கே அந்த ருசி புரியும்.
வண்ணத்துப் பூச்சிகளும், தும்பிகளும், தேனீக்களும் அங்குமிங்கும் பறந்து செல்லும் அழகோ தனி.
காலையிலும் மாலையிலும் அழகு காட்டிச் செல்லும் ஜோடி மைனாவையும் மணிப்புறா ஜோடியையும் இரசிப்பதில் கொள்ளைப் பிரியம் எனக்கு.
மரங்கள் காய்த்துக் குலுங்கும் பருவத்தில் நாமும் அணிலும் மர அணிலும் கிளிகளும் ஏனைய பறவைகளும் பழங்களைப் பறித்து உண்பதில் இருக்கும் போட்டி அலாதியானது. எப்போதும் முதல் பழம் மர அணிலாருக்கே செல்லும். பின்னரே மற்றவர்களுக்கு கிடைக்கும்.
இவ்வளவு நாளும் இயந்திரமயமான வாழ்க்கையில் இவற்றை அனுபவிக்க கிடைக்காதது என் துரதிஷ்டமே. பெருந் தொற்று கொரோனாவின் பின்னரான, "வேர்க் ப்ரம் ஹோம்" இந்த நிலைமையை மாற்றி அது தற்போது வரை என் விசயத்தில் தொடர்கிறது.
மரங்கள் மீதான ஆர்வமும் காதலும் என் வாப்பாவின் ஜீன் மூலம் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டது. மரங்கள் புடை சூழ என் கனவு இல்லத்தை நினைத்துப் பார்க்கும் போது மனது பூரிக்கிறது.
பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் வேண்டும்.
முக்கனிகளுடன் பழ மரச் சோலை அமைய வேண்டும்.
இடையே காய்கறித் தோட்டம் வேண்டும்.
அதில் நானும் என் பிள்ளைகளும் உறவுகளும் சுற்றத்தாரும் பறவை பட்சிகளும் புசித்து மகிழ வேண்டும்.
மாலை வேளையில் நாம் கதைகள் பல பேசி மகிழ்ந்திட வேண்டும்.
-ஜெம்ஸித்-
28.06.2022
Comments
Post a Comment