தபால்காரன் (Postman)
ஸ்மார்ட் போன்கள் மற்றும் சோசியல் மீடியாவின் வருகைக்குப் பின்னர் தபால்காரனின் வருகை தேவையற்றதாகவே மாறி விட்டது. எப்போதாவது இருந்து நின்று ஏதாவது அலுவலகக் கடிதங்களை சுமந்து வருவார் தபால் மாமா.
ஒரு காலம் தபால் மாமாவின் கடிதங்களை ஆவலுடன் எதிர்பார்ப்போம். அவற்றைப் பிரித்து வாசிப்பதில் கொள்ளை ஆனந்தம். வாசிக்க தெரியாதவர்களுக்கு வாசித்துக் காட்டியும் பதில் கடிதங்கள் எழுதிக் கொடுத்த அனுபவங்களும் என்னைப் போல உங்களுக்கும் இருக்கும். இப்போ அந்தக் காலம் மலையேறிவிட்டது.
நேற்று (27.06.2022) வீட்டு ஹோலில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்தேன். அப்போது "க்ளிங் க்ளிங்" என்று வெளியே சத்தம் கேட்டது. யாராக இருக்கும்? யோசனையோடு வெளியே சென்று பார்த்தேன்.
தபால்காரன் தான். சைக்கிளில் வந்திருந்தார். அவரை நான் சைக்கிளில் எதிர்பார்க்கவில்லை. புதினமாக இருந்தது எனக்கு. ஆனால் நாட்டு நிலைமையில் அவர் சைக்கிளில் வந்தது ஒன்றும் ஆச்சரியமல்ல.
தம்பிக்கு அலுவலகக் கடிதம் ஒன்று வந்திருந்தது. வாங்கியபடியே நான், " ஆயெத் புட் பைசிகல் பதின்ட உனா நேத" (மீண்டும் சைக்கிள் மிதிக்க வேண்டி ஆகி விட்டதே) என்று கேட்டேன். அவரும் ,"மொனவ கரன்டத மிஸ்.. ராஜகாரிய கரண்ட் எபாஏ?" (என்ன செய்ய மிஸ்.. கடமையைச் செய்ய வேண்டாமா?)என்றார் சிரித்துக் கொண்டே. அவர் போய் விட்டார். என் சிந்தனை பின்னோக்கிச் சென்றது.
தபால் மாமா மெலிந்த குட்டையானவர். மா நிறம். இடையிடையே வெற்றிலைப் பாக்கும் போடுவார். சைக்கிள் மிதித்தே எங்கள் ஊருக்கு வந்து கடிதங்களை பகிர்ந்தளிப்பார். நான் அறிந்த வயது முதல் எங்கள் ஊரின் தபால்காரன் அவரே.
அவர் தற்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கியிருப்பார் என நினைக்கிறேன். அதனால் கடிதம் பகிர்தலைப் பழக்க இளம் வயது இளைஞன் ஒருவரையும் உடன் அழைத்துச் செல்கிறார். நேற்றும் அவர் வேறொரு சைக்கிளில் வந்திருந்தார்.
அவருக்கு என்னையும் என் தம்பியையும் நன்கு குறிப்பிருக்கும். முகவரி குழப்பமான இடங்களை எம்மிடம் காட்டி தெளிவுபடுத்திக் கொள்வார். எங்கள் ஊர் தபால் மாமாவை சைக்கிளில் கண்டே எனக்கு அறிமுகம். கடுமையான வெயிலிலும் சைக்கிள் மிதித்து செல்வார்.
எனினும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அவர் மோட்டார் வண்டியில் வந்தே மடல்களைப் பகிர்ந்து விட்டுச் செல்வார். ஆனால் நம் நாட்டின் எரிபொருள் தட்டுப்பாடு அவரை மீண்டும் பழைய இடத்துக்கே செல்ல வைத்து விட்டது. மீண்டும் அதே சைக்கிள். "பீப் பீப் மாறி மீண்டும் க்ளிங் க்ளிங்".
ஓய்வு பெறும் வயதில் கூட அவருக்கு ஏற்பட்ட கஷ்ட காலத்தை எண்ணி, நம் நாட்டுக்கு எப்போது விடிவு வருமோ என்றெண்ணியபடி வீட்டினுள் நுழைகின்றேன்.
இலங்கையின் தபால் சேவையின் ஆரம்பித்தை வீடியோ காட்டுகிறது
- ஜெம்ஸித் -
28.06.2022
Comments
Post a Comment