யானை உண்டியலும் ஆமை உண்டியலும் (Money Saving Box)



என் மகள் தவழ்ந்து திரியும் பருவம். அன்றொரு நாள் என் சிந்தனை பலமாக வேலை செய்தது. காரணம் என் சகோதரி ஒருவர் சொன்ன சேதி. அப்படி என்ன சொல்லியிருப்பார் என்று நீங்கள் யோசிக்கலாம்? அது உங்களுக்கு ஒரு விசயமாக இல்லாமலும் இருக்கலாம். 

ஆனால் நான் மண்டையைப் பிய்த்து யோசித்தேன். அது "ஒரு இரண்டு வயது பிள்ளை நாணயக் குற்றி ஒன்றை வாயில் போட்டு விழுங்கிட்டுதாம். ஹொஸ்பிடல் கொண்டு போய்ட்டாங்களாம். என் பயம் இதுதான்.

என் மகள் தவழ்ந்து திரியும் போது எதையாவது வாயில் போட்டு விடுவாளோ என்ற பயம். பொதுவாக குழந்தைகள் சிறிய வண்டு அல்லது பூச்சிகளை வாயில் போடுவது வழமை. ஆனால் என் மகள் இன்று வரை அவற்றை வாயில் போட்டதில்லை. எனினும் பூச்சிகளை கையால் பிடித்துப் பார்ப்பதில் உள்ள ஆர்வக் கோளாறினால் அவை விரல்களை கடித்து வைத்த சந்தர்ப்பங்கள் உள்ளன. 

விசயத்துக்கு வருவோம். நாணயங்களை வாயில் போடாமலிருக்க என்ன வழி? ஒரு மண்ணாங்கட்டியும் மூளையை சலவை செய்தும் அகப்படவில்லை. என் வீட்டில் யாராவது நாணயக் குற்றிகளை சிறிய மேசையில் வைத்து விடுவார்கள். அது என் மகளுக்கு எட்டும் உயரம். மறதி இருப்பதனால் பெரியவர்களை குற்றம் சொல்ல முடியாது. மகள் நாணயக் குற்றிகளை வாயில் போட்டு விழுங்கி விட்டால் என் கதி அதோ கதி தான். உம்மாவைத் தான் எல்லோரும் குற்றம் பிடிப்பார்கள் ஒழுங்காக பிள்ளையைப் பார்க்கவில்லை என்று. இது தான் என் பிரச்சினைக்கு காரணம். 

மறுநாள் இந்த விசயம் சுத்தமாக எனக்கு மறந்து விட்டது. இது எம் பொதுவான இயல்பு தானே? 

இரண்டு நாட்களின் பின்னர் மகளை அழைத்துக் கொண்டு சிறுவர் பூங்காவுக்கு சென்றோம். திரும்பி வரும் போது பூச்சாடிகள் வாங்க ஒரு ப்ளாஸ்டிக் கடையில் நிறுத்தினோம். 

கண்முன்னே வாங்க வேண்டிய பொருள் இருந்தாலும் கடை முழுக்க சுற்றி வந்து நோட்டமிட்ட பின்னரே உரிய பொருளை வாங்குவது பெண்களின் பழக்கமாயிற்றே. இதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 

அவ்வாறு கடையை நோட்டமிடும் போது பல டிஷைன்களிலான உண்டியல்கள் என் கண்ணில் பட்டது. முந்தநாள் சம்பவம் கண்ணில் ஓட இதை ட்ரை பண்ணினால் என்ன என என் மனம் கேள்வி கேட்க முன்னரே, கைகள் முந்திக் கொண்டு யானை உண்டியலையும் ஆமை உண்டியலையும் எடுத்துக் கொண்டன. 150/- ரூபாய்க்கு  இரண்டு உண்டியல்கள். இப்போது அந்த விலைக்கு கிடைக்குமா என தெரியவில்லை. 

என் முயற்சி வீண் போகவில்லை. வீட்டுக்கு வந்து நாணயக் குற்றிகளை எடுத்து போட்டுக் காட்டினேன். மகளுக்கு அது விளங்கியதோ என்னவோ நானறியேன். ஆனாலும் அந்த யானை, ஆமை உருவம் பிடித்துப் போனது அவளுக்கு. அதனால் குற்றிகளை யானையில் தான் போட வேண்டும் என்று விளங்கியிருக்க வேண்டும். 

 பிஞ்சு விரல்களால் சிறிய துளையினுள் குற்றிகளைப் போடுவதற்கு தடுமாறினாலும் நாளடைவில் பழகிக் கொண்டாள். 
 என் பயம் நீங்கியது. 

ஆனால்...ஆனால்... இனி புதிய பிரச்சினை ஆரம்பமானது.

மகள் அடிக்கடி வீட்டில் எல்லோரிடமும் கொய்ன்ஸ் கேட்கத் தொடங்கி விட்டாள். "யானிக்கு போட கொய்ன்ஸ் தாங்கோ" என வீட்டில் வாப்பா, உம்மும்மா, பூமா, மாமா என ஒருவரையும் விட்டு வைப்பதில்லை. டெய்லி அவர்கள் கொய்ன்ஸுக்கு எங்கே செல்வார்கள். அந்தோ பரிதாபம்.
 
எப்படியோ மகளின் யானி நிறைந்து விட்டது. ஆமை வெயிட்டிங். இன்னும் பாதி நிரம்ப வேண்டியுள்ளது. நான் தப்பினேன், பிழைத்தேன். 

சின்ன மகளின் விசயத்தில் இந்த தியரி வேர்க் அவுட் ஆகுமா என்று தெரியவில்லை. முயற்சி செய்து பார்க்க வேண்டியது தான். 

- ஜெம்ஸித் - 
   27.06.2022 


Comments

Popular posts from this blog

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

சாரைப்பாம்பு! (Rat Snake)

மாட்டு வண்டியிலே! (Cart Jurney)