உம்மியின் ஏக்கம்
தொழில் நிமித்தமாக நான் கொழும்பில் வசித்தேன். என் முதல் பிரசவத்தின் பின்னர் பிரசவத்தின் பின் மறுநாளே ரென்ட் வீட்டை ஒப்படைத்து விட்டு ஊருக்கு வந்து விட்டோம்.
பிரசவ விடுமுறையில் நாட்கள் ஓடின. ஹாப்f பே, நோ பே வரை லீவுகள் பறந்தன. தொழிலுக்கு மீள போகும் நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது.
கொழும்புக்கு மீண்டும் சென்றால் மகளை பார்த்துக் கொள்வது யார்? என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. என் உம்மாவுக்கும் என்னோடு வர முடியாத நிலை. குடும்பத்திலும் அழைத்துச் செல்ல யாருமில்லை. தெரிந்தவர்கள் மற்றும் ஊரில் பலரிடமும் விசாரித்தோம். யாரும் அவ்வளவு தூரம் வரத் தயாரில்லை. டே கெயாரில் 9 மாத குழந்தையைப் போடுவதும் சாத்தியமில்லை. என்ன செய்வதென்று ஒரே குழப்பம்.
ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் பணிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆள் ஒருவர் கிடைக்கும் வரை மகளை உம்மாவிடம் பார்க்கச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கொழும்புக்கு போய் வருவது எனத் தீர்மானித்தேன்.
அதிலும் சில பல சிக்கல்கள் இருந்தன. கொழும்புக்குப் போய் வர சுமார் 280km. 8-9 மணித்தியாலப் பயணம். ட்ரபிக் பொறுத்து டைம் மேலும் அதிகரிக்கும். அதிகாலை 4.30க்கு வீட்டிலிருந்து வெளியானால் இரவு 9 அல்லது 10 மணியாகும் வீடு வர. அவ்வளவு நேரம் 9 மாத மகளைப் பிரிந்து இருக்க வேண்டுமே என மனம் வலித்தது. ஹபியோ தொழிலை விடுமாறு கூறி விட்டார். அதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை.
படைத்த இறைவன் ஒரு தீர்வை வைத்திருப்பார் என்ற நம்பிக்கையில் பணிக்குச் செல்ல ஆரம்பித்தேன்.
முதல் நாள் அலுவலகம் சென்ற பின்னர் மகள் பற்றிய எண்ணமே என்னைச் சுற்றி ஓடியது. விரைவாக வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றே மனம் விரும்பியது. ஓப்f ஆகும் நேரம் 4.15 வரை பொறுமையின்றிக் காத்திருந்தேன். சக அலுவலர்கள் ஆறுதல் கூறினர். எல்லாம் கடந்து போகும். பொறுமையாக இருங்கள் என்றனர். தொழிலை விட்டு விட வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கினர்.
மாலையில் பஸ் ஏறியதும் வீடு வரும் வரை பொறுமையின்றி இருந்தேன். மகளை பார்க்க வேண்டும். அவள் எனக்காக ஏங்கிக் கொண்டிருப்பாளே? என்னைத் தேடுவாளே? ஒழுங்காக சாப்பிட்டாளா? அழுதாளா? என்றெல்லாம் மனம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த உணர்வை வடிக்க வார்த்தைகள் இல்லை என்பேன்.
ஹபி அன்று வீட்டில் மகளுடன் இருந்தார். அவரிடம் போனில் கேட்கும் போதெல்லாம் அவர் என்னை சமாதானப்படுத்த மகள் நன்றாக இருக்கிறாள் என்றார்.
இரவு 9 மணியளவில் வீட்டுக்கு வந்து அவளை அள்ளி அணைத்த பின்னரே என் ஆதங்கம் அடங்கியது. அவளும் என்னை மிஸ் பண்ணியதை உணர்ந்தேன். அவள் உம்மியைத் தேடி வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாகத் தவழ்ந்து சென்றதாகவும் இறுதியாக பொறுக்க முடியாது அழுததாகவும் என் உம்மாவும் ஹபியும் கூறிய போது எனக்கு அழுகையே வந்து விட்டது.
மறுநாள் வேலைக்குப் போகவில்லை. போக மனமும் உடலும் ஒத்துழைக்கவில்லை. அவ்வளவு தூரம் பஸ்ஸில் போவதும் அலுப்பாக இருந்தது.
வாரத்தில் இரண்டு நாட்கள் வேலைக்குப் போனேன். மீதி நாட்கள் லீவு. என் வேலைகளை வீட்டுக்கு கொண்டு வந்து செய்தேன். அண்மைய இடத்துக்கு டிரான்ஸ்பர் கேட்டேன். கிடைக்கவில்லை. தற்காலிகமாக 6 மாதத்துக்கு கேட்டேன். புறக்கணிக்கப்பட்டது.
மனப் பாரத்துடன் தொழிலுக்குச் சென்று வந்தேன். சிறிது சிறிதாக பிரயாணத்துக்கும் மகளைப் பிரிந்து இருக்கவும் பழக்கப்பட்டேன்.
என்னைப் போன்று தொழில் செய்யும் எல்லாத் தாய்மாரும் தம் பிள்ளைகளைப் பிரிந்து துயரினை அனுபவித்தே இருப்பர்.
அந்த வருடமும் (2019) நிறைவடைந்தது. புது வருடத்தில் கொழும்புக்கு போய் விட வேண்டும் என எண்ணியிருந்தேன். ஆனால் பிள்ளை பார்க்க ஆள் தான் கிடைக்கவில்லை. டே கெயாரிலாவது போடுவோம் என்றிருந்தேன்.
என் லீவும் ஏறிக் கொண்டே சென்றது. என்ன செய்வதென்றே குழப்பம். நிம்மதியாக ஒரு விடயத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.
அப்போது தான் உலகமெல்லாம் கொவிட் தொற்று பரவிக் கொண்டிருந்தது. இலங்கையிலும் முதல் தொற்றாளர் அடையாளப்படுத்தப்பட, கொழும்பு ஆனந்தா கல்லூரியில் தொற்றாளரின் பிள்ளை படிப்பதால் ஏனைய பிள்ளைகளின் பெற்றோர்கள் குழப்பம் போட நாடு இழுத்து மூடப்பட்டது. வீட்டிலிருந்து வேலை ஆரம்பமானது.
கொவிடின் கோரத் தாண்டவம் ஒரு புறம் மரண பீதி மறு புறம் என பயமே வாழ்க்கையானாலும் உம்மியின் துயர் துடைக்க வந்த அருளாகவே அன்றைய கொரோனா என் கண்ணில் பட்டது.
இடையிடையே நாடும் அலுவலகமும் திறந்த போது பணிக்கு சென்று வந்தேன். கொவிட் முடக்கமும் நீண்டு கொண்டே சென்றது. எப்படியோ என் மகளும் வளர்ந்து விட்டாள். உம்மியைப் பிரிந்து உம்மும்மாவுடனும் வாப்பாவுடனும் இருக்கவும் பழகி விட்டாள். என் மனப் பாரமும் ஓரளவு குறைந்து விட்டது.
எது எப்படியோ இரண்டாவது மகளும் பிறந்து விட்டாள். அவளைப் பிரிந்து தொழிலுக்குச் செல்வது எவ்வாறு என யோசிக்கும் போதே பொருளாதார நெருக்கடி வந்து நாடு முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. என் நல்ல காலமா? கெட்ட காலமா? நானறியேன். எது எப்படியோ நான் இன்னும் கொழும்புக்கு போகவில்லை நிரந்தரமாக.
ஒரு தாயாக இது போன்று உங்களுக்கும் பல அனுபவங்கள் இருந்திருக்கும். கடந்து வந்து வெற்றியும் பெற்றிருப்பீர்கள். எல்லாம் ஒரு நாள் கடந்து போகும் என்ற நம்பிக்கை தான் வாழ்க்கை.
- ஜெம்ஸித் -
29.06.2022
Comments
Post a Comment