புளிச்சாக்குளமும் உடப்பு பீச்சும் (Pulichchakulam and Udappu Beach)
உடப்பு என்றதும் பல்கலைக்கழக தோழி நித்திய வாணியே எப்போதும் நினைவுக்கு வருவாள். கெம்பஸ் இறுதியாண்டின் போது வாணியின் ஊரான உடப்புக்குச் சென்று அங்கு ஒருநாள் தங்கி உடப்பு பீச் வரை சுற்றிப் பார்த்த நினைவுகள் இன்னும் மனக் கண் முன் நிழலாய் ஓடுகின்றது.
அன்றொரு ஞாயிற்றுக் கிழமை (18.09.2022) உடப்பை அண்மித்த ஊரான புளிச்சாக்குளம் நோக்கி எம் பயணம் ஆரம்பமானது. பயணம் சுமார் 60km தூரம் ஆன போதிலும் பிள்ளைகளுடன் மோட்டார் வண்டியில் நெடுந்தூரப் பயணமாகவே எனக்கு விளங்கியது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 11.30 புளிச்சாக்குளம் சென்றடைந்தோம். இரண்டரை மணித்தியாலப் பயணம் தான்.
பயணம்! பயணம்! என்று அலட்டுகிறேன். யார் வீட்டுக்கு என்று சொல்லவில்லையே! என் சகோதரி நிரோஷா நிஸாம் வீட்டுக்கான உறவுப் பயணம். அதாவது என் கணவரின் நானா வீட்டுக்கான பயணம். இது நான்காவது பயணம். எனினும் முன்னைய பயணங்களை விட விசேடமானது.
பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம். ஆசைதீர விளையாடினார்கள். ஆதிப், ஆமிர் உடன் மனால், மர்யம் இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். மனாளின் நீண்ட நாள் கனவு புளிச்சாக்குளம் செல்லும் ஆசை. சுமார் மூன்று வருடங்களின் பின்னரே அன்று நாம் சென்றோம். கொரோனா உறவுப் பயணங்களுக்கு எமனாக இருந்தது.
விருந்துபசாரத்தில் நிரோஷா வீட்டினரை யாரும் குறை சொல்ல முடியாது. அவ்வளவு உபசரிப்பு. நிரோஷாவின் உம்மாவின் கைவண்ணத்தில் பகல் போஷணம். அங்கு புதிய மீன்கள் எப்போதும் கிடைப்பதனால் முன்கூட்டியே மீன் சமைக்குமாறு கூறி விட்டோம்.
இருவகையான மீன் கறியுடன் போஞ்சிக்காய் கறி, பாகற்காய் வற்றல், பப்பாசி சுண்டல் என எம் விருப்பத்துக்கேற்ற நாட்டுக்கறிகளுடன் பகல் உணவு தயாரானது. நன்றாகப் புசித்து விட தூக்கம் கண்ணைக் கட்ட நன்கு தூங்கினோம். மாலை 5 மணிக்கு எம் வீட்டுக்குத் திரும்புவதாக உத்தேசம். நிரோஷா வீட்டினர் விடுவதாக இல்லை. நாமும் விடுவதாக இல்லை. என் கணவருக்கு மறுநாள் கொழும்பு செல்ல வேண்டிய தேவை இருந்ததினால் நாம் உடனே திரும்புவதாக இருந்தோம். எனினும் நிரோஷா வீட்டினர் வெற்றி பெற அன்று இரவு தங்குவது எனத் தீர்மானித்தோம்.
புளிச்சாக்குளம் சென்றால் ட்ரெயின் காட்ட வேண்டும், ட்ரெயினில் கூட்டிச் செல்ல வேண்டும், பீச் போக வேண்டும் என்பது மனாளின் ஆசைகள்.
மாலையில் உடப்பு பீச் நோக்கிச் சென்றோம். அழகிய பீச்சின் கரைகளில் குப்பை கூழங்கள் நிறைந்திருந்தமை கவலையைத் தந்தது. பிள்ளைகளுக்கு பீச் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைக் கொடுத்தது. துள்ளி விளையாடினர். எனினும் கை வளைவினுள்ளே பிள்ளைகளை வைத்திருந்தோம். காரணம் அலைகளதும் காற்றினதும் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது.
மாலையில் கடல் நீரினுள் சூரியன் அமிழ்ந்து செல்லும் காட்சி இரம்மியமாக இருந்தது.
மீன்பிடிப் படகொன்று அலையின் பேயாட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருந்ததைப் பார்க்க மீனவர்களின் நிச்சயமற்ற வாழ்க்கையை எண்ணி மனசு அங்கலாய்த்தது. வேகமான காற்றும் அகோரமான அலைகளும் இருளும் நம்மை நெடுநேரம் அங்கு நிற்க விடவில்லை. நிரோஷாவின் தம்பி மிர்ஷாதின் நண்பர்கள் கொண்டு வந்த வடைகளை ருசி பார்த்து விட்டு சில பல போட்டோக்களையும் கிளிக்கிக் கொண்டு கிளம்பினோம்.
வீடு வந்து சேர கரண்டும் துண்டிக்கப்பட இருட்டில் இராப் போஷணம் தயாராகிக் கொண்டிருந்தது. இடியப்பம், சிக்கன் கறி, தேங்காய்ச் சம்பல், பருப்புக்கறி என டைனிங் டேபல் அலங்கரிக்கப்பட்டு எம் வயிறும் நிரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லா.
"நாங்க இங்கேயே நிப்பம் உம்மா, எந்த நாளும் பீச் பாக்க போகனும்" என்று மனாள் அவளது உள்ளத்து ஆசையை என்னிடம் வெளிக்காட்டிக் கொண்டாள்.
பயணக் களைப்பு, தூக்கம், புதிய இடம், நுளம்புக்கடி என்பன சேர்ந்து மனாளின் வீண் பிடிவாத அழுகையுடன் இரவுத் தூக்கம் எமை ஆரத் தழுவியது. காலையில் மீண்டும் மனாளின் அழுகை அனைவரினதும் தூக்கத்தைக் களைத்தது.
காலை டீயுடன் லேவரியா, கொழுக்கட்டை வயிற்றுக்குள் சென்றதை மனாள் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறாள். கொழுக்கட்டை சாப்பிட புளிச்சாக்குளம் போவமா? என்ற கேள்வியுடன்.
நிரோஷாவின் வீட்டுக்கு முன்னாள் ட்ரெயின் ரோட். மனாள் ஆசை தீர ட்ரெயின் பார்த்தும் பயணிகளுக்கு டாட்டா சொல்லியும் மகிழ்ந்தாள். ஆனால் ட்ரெயினில் போவதற்கான ஏற்பாடுகளை நாம் முன் கூட்டியே செய்து கொள்ளவில்லை.
காலையில் நிரோஷாவின் தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு பூமா, மாமா வீடுகளுக்கும் சிறிய விசிட் ஒன்றையும் செய்து விட்டு வீடு வர ரெடியானோம்.
காலை சிற்றுண்டியாக பஸ்டா நிரோஷாவின் உம்மாவின் கைவண்ணத்தில் தயாரானது. அதையும் ஒருபிடி பிடித்துவிட்டு எம் வீட்டை நோக்கி பயணத்தைக் கட்டினோம்.
வந்து மறுநாளே என் கணவருக்கு குளிர் ஜுரம் தொற்றிக் கொண்டது. கடல் காற்றும் வெப்பமும் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை போலும்.
கடலும் கடல் சார்ந்த இடமுமான நெய்தல் நிலத்தில் அமைந்துள்ள புளிச்சாக்குளம் பச்சைப் பசேல் என்ற அழகிய இடமாகும். அங்குள்ள மக்களின் விருந்தோம்பலும் மறக்க முடியாதவை. என் மகள் மனாளுக்கு மறக்க முடியாத பயணங்களில் ஒன்று புளிச்சாக்குளம்.
கீரியங்கல்லி பள்ளிவாசலில் வருடா வருடம் கந்தூரி நடைபெறுவதால் அந்த ஊர் பிரசித்தமானது என அறிந்து கொண்டோம்.
பல்கலைத் தோழி சுமைய்யாவின் நினைவு வந்த போதும் அவளை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவில்லை.
பயணம் தொடரும்....
-ஜெம்ஸித்-
08.10.2022
Comments
Post a Comment