கிலி கொள்ளச் செய்த கடற் பயணம் (Scared Sea Jurney_Delft Island)
இரண்டு வருடங்களுக்கு முன்...
"இன்று காலை நெடுந்தீவு நோக்கிச் சென்ற கப்பல் பலத்த காற்று காரணமாக கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு. பலரைக் காணவில்லை. தேடுதல் பணி தொடர்கிறது. அதிகமான பொருட்களை ஏற்றிச் சென்றமையே விபத்துக்கான காரணம்".
மகள் மனாலைத் தூங்க வைத்துக் கொண்டிருந்த என் காதில் இச்செய்தி விழுந்த போது ஒரு கணம் என் உடல் சிலிர்த்து நடுங்கியது. காரணம் இல்லாமல் இல்லை.
2018 மே மாத ஆரம்பப் பகுதி. என் அலுவலகத்தில் இருந்து களப் பணிக்கு யாழ்ப்பாணம் சென்றோம். தொகை மதிப்பீடு சம்பந்தமாக பிரதேச செயலகங்களுக்கு சென்று மேற்பார்வை செய்ய வேண்டிய பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து கடினமான இடங்களின் பணிகளை மாவட்ட செயலகத்தில் இருந்தும் செய்ய முடியும்.
சக அலுவலர்களுக்கு டெல்ப் (நெடுந்தீவு) செல்ல வேண்டும் என்ற ஆசை. ஏன் எனக்கும் தான். கப்பல், படகுப் பயணம் என்றால் கொள்ளைப் பிரியம் எனக்கு.
நான்கு முறை யாழ்ப்பாணத்துக்கு களப் பணிக்காகச் சென்றேன். இறுதியாக நான் சென்ற பயணத்தின் போது டெல்ப் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அன்று காலை ஏழு மணிக்குச் செல்லும் கப்பலில் டெல்ப் செல்வதாக உத்தேசம். நாங்கள் தலைமைக் காரியாலய அலுவலர்கள் ஆறு பேர். டெல்ப் புள்ளிவிபர அலுவலரும் மாவட்ட புள்ளிவிபரவியலாளரும் எங்களுடன் இணைந்து அவர்களே பயணத்தை ஒழுங்கு செய்தனர்.
உரிய நேரத்துக்கு குரீகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்தோம். டிக்கட்டுக்களையும் வாங்கிக் கொண்டு கப்பலில் ஏறினோம். கப்பல் நிரம்பி வழிந்தது. டெல்பில் கடமையாற்றும் அரச ஊழியர்கள், சாதாரண பொதுமக்கள், அவர்களின் பொருட்கள், தீவில் இறங்கி தம் வேலைகளுக்கு அங்குமிங்கும் செல்ல மோட்டார் வண்டிகள் என கப்பல் மூச்சு முட்டிக் கொண்டிருந்தது. அது ஒரு சாதாரண துரித சொகுசுக் கப்பல் ( எம் நாட்டின் அதிவேக ட்ரெய்ன்கள் போன்று). கப்பலின் உள்ளே ஆசனங்கள் இருந்தன. கடல் நீர் கப்பலின் உள்ளிருந்து பார்க்கும் போது விளங்காது.
படம்: துரித சாதாரண சொகுசுக் கப்பல்
மேற்பகுதிக்கு ஏறிச் சென்று இந்து சமுத்திரப் பரப்பை பார்த்துக் கொண்டும் செல்லலாம். கடல் நீர் கைகளுக்கு எட்டாது. நாங்களும் மேல் பகுதியில் இருந்து நீலக் கடலையும் ஒளி பரப்பும் காலைக் கதிரவனின் அழகையும் நீல வானையும் நீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் கப்பலின் வேகத்தையும், அலை அலையாய் குலுங்கிக் கொண்டிருக்கும் ஆழ் கடலின் அழகையும் துள்ளிப் பாயும் மீன்களையும் ரசித்த வண்ணம் கடற் பயணம் ஆரம்பமாகியது. நான் ரசித்துச் சென்ற முதல் சாதாரண சொகுசுக் கப்பல் பயணமும் நீண்ட தூர ஆழ் கடல் பயணமும் இது தான்.
மனதில் குதூகலமும் ஒரு வித ஆனந்தமும். ஆழ்கடலில் ஒரு மணி நேரப் பயணம். சரியாக எட்டு பத்துக்கு கரையை வந்தடைந்தோம். துரித பயணச் சேவையாகையால் பயணம் இலகுவாக இருந்தது. இயற்கையின் அழகில் மூழ்கி இருந்ததனால் நெடுந்தீவுக்கான நெடுந் தூரப் பயணம் அலுப்புத் தட்டவில்லை. விரைவாக வந்து விட்டதாகவே உணர்ந்தேன்.
இறங்கியதும் எங்களுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த வாகனத்தில் பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தோம். பணிகளை முடித்து விட்டு டெல்பை சுற்றிப் பார்க்கச் சென்றோம். அது பற்றி இன்னொரு பதிவில் குறிப்பிடுகின்றேன்.
படம்: டெல்ப் அமைவிடம்
மாலையில் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வர வேண்டும். நாங்கள் பயணம் செய்த கப்பல் மூன்று மணிக்கு செல்வதை அறிந்து உரிய நேரத்துக்கு இறங்கு துறையை வந்தடைந்தோம்.
அந்தோ ஏமாற்றம். நாங்கள் காலையில் சென்ற கப்பல் 10 மணிக்கு குரீகட்டுவான் நோக்கித் திரும்பிச் சென்ற பின்னர் மீண்டும் ஏதோ கோளாறு காரணமாக வரவில்லை என அறிந்து கொண்டோம். அது மீண்டும் மறுநாள் தான் வருமாம்.
வேறொரு சிறிய படகுக் கப்பல் செல்லத் தயாராக இருந்தது. அதை விட்டால் மீண்டும் ஏழு மணிக்கு தான் ஒரு படகுக் கப்பல் இருக்கிறது என்றனர்.
மனதில் பயம் தொற்றிக் கொண்டது. கடற் பயணத்தையும் கப்பலையும் நிச்சயிக்க முடியாதே. இரவில் பயணம் செய்வதிலும் பயம். நிற்க முடியாத அளவு வெயிலும் அகோரமாக இருந்தது. காத்திருக்காமல் வேறு வழியின்றி அந்தப் படகுக் கப்பலில் ஏறிக் கொண்டோம். கப்பல் நிரம்பி வழிகிறது. உட்கார ஓரிரு பலகை ஆசனங்கள். அதிகமான சனம் கீழே அமர்ந்து கொண்டனர். பயணம் ஆரம்பமாகியது.
அந்தக் கப்பலில் கூரை இல்லை. தலைக்கு மேலால் சூரியனின் அட்டகாசம் நடந்து கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில், ஒரு பக்கம் காற்று, நிழல் இல்லை.. ஒழிந்து கொள்ள இடமில்லை. ஆழ் கடல் மிக சமீபத்தில். கையால் தொடும் தூரத்தில் கடல் நீர். அலைகள் பாய்ந்து வருகின்றன. அலைகளைக் கிழித்துக் செல்லும் கப்பலின் வேகத்தில் கடல் நீர் எம் மீது பட்டுத் தெறிக்கிறது.மரண பயம் ஆட்கொள்கிறது.
ஐயோ இந்தப் பயணம் தேவை தானா? இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறதே? ஏதும் நடந்து விட்டால்?? கப்பலுக்குள் தண்ணி வந்து விட்டால்? இடையில் கப்பல் நின்று விட்டால்? சுனாமி வந்து விட்டால்? காலையில் இந்த நினைவுகள் ஒன்றுமே என் மனதைத் தொடவில்லை. கடலின் அழகில் மதிமயங்கி இருந்திருப்பேன் போல.
இனி இப்படிப் பயணம் வரக் கூடாது. இந்த சனம் டெய்லி எப்படித் தான் போய் வருதுகளோ? மனம் அங்கலாய்க்கிறது. சக பயணிகளை நோட்டமிடுகிறேன். அனைவரும் எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தார்கள். என்னோடு சென்ற சகபாடிகளும் சாதாரணமாகவே இருந்தார்கள். வெயில் மட்டும் தான் அவர்களின் பிரச்சினை. எனக்கு மட்டும் தான் பதட்டம் போல. எல்லாம் காலையில் சென்ற கப்பல் வராமையே காரணம் என மனதுக்குள் எண்ணிக் கொண்டேன்.
கரையை அடையும் வரை பதட்டம். நம் நாட்டின் ஸ்லோ ட்ரெய்ன் போல அந்தக் கப்பலும் மெதுவாகவே வந்தது. ஒருவாறு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் கரையை அடைந்தோம். இறங்கியதும் நிம்மதிப் பெரு மூச்சு. அப்பாடா என்றிருந்தது. இது இப்படியிருக்க நான் கடலில் நைனா தீவுக்கு இதே இறங்கு துறையிலிருந்து இப்பயணத்துக்கு முன்னர் மூன்று முறை சென்று வந்திருக்கிறேன். ஆனால் அது குறுகிய தூர கடல் பயணம்.
இப்பயணம் என் ரசனையை அதிகப்படுத்தியது மாத்திரமன்றி மரண பீதியையும் ஏற்படுத்திச் சென்றதில் சந்தேகமில்லை. காலையிலும் மாலையிலும் இரு வேறு அனுபவங்கள். கப்பல் விபத்துக்கள் பற்றி காதில் விழும் போதெல்லாம் என் நினைவுகளைத் தொட்டுச் செல்கிறது டெல்ப் பயணம்.
நினைவுகள் அழிக்க முடியாத பொக்கிஷங்கள்.
மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் டெல்ப் பயணம் சென்று வருவேன் படைத்தவனின் உதவியால். தற்போது புதிய படகு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பயணம் தொடரும்!
- ஜெம்ஸித் -
Comments
Post a Comment