சாரைப்பாம்பு! (Rat Snake)

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அது சாரைப் பாம்பாக இருந்தால் என்ன? நாகப் பாம்பாக இருந்தால் என்ன?

அன்று காலை பத்து மணி போல் இருக்கும். நான் சின்னவளைத் தூங்க வைத்து விட்டு குசினியில் (Kitchen) வேலையாக இருந்தேன். மூத்தவள் வெளியே பின் வராந்தாவில் விளையாடிக் கொண்டிருந்தாள். 

அப்போது மூன்றரை வயதான என் மூத்தவள் என்னிடம் ஓடி வருகிறாள். வந்து,

"உம்மி! என்னமோ வருது" என்றாள். 

"நாயா? பூனையா?" என்கிறேன் நான்.

"இல்லம்மா... பெரிய புழு ஒன்டு நெளிஞ்சு வருது" என்கிறாள்.

நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

எனினும் "எங்க?" என்று ஜன்னல் வழியாக வீட்டு வாசலைப் பார்க்கிறேன். 

புழுவைக் காணவில்லை. 

"அதும்மா.. அங்க" என்கிறாள் மகள். 

சற்று கண்ணை உயர்த்தி முன்னே பார்க்கிறேன். 

எங்கள் வீட்டின் உள்ளு (தேங்காய் உரிக்க பயன்படும் உபகரணம்) இருந்த இடத்திலிருந்து ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து மெதுவாக வருகிறது. 

கண்டதும் என் மேனியெல்லாம் சிலிர்த்து விட்டது. 

"அது தான் பாம்பு" என்கிறேன் நான். 


"இது கோப்ரா இல்லையே? சின்ன பாம்பா? என்கிறாள். அவள் இரண்டு வாரங்களுக்கு முன் தான் கோப்ரா சாகசம் பார்த்து வந்தாள். அதனால் பெரிய சாரைப்பாம்பும் அவளுக்கு சிறிய பாம்பாகவே விளங்கியது போலும். 

நான் பாம்பை உற்றுப் பார்க்கிறேன். பாம்பு ஏதும் இரையை விழுங்கியிருக்கும் போல. மெதுவாகவே ஊர்ந்து வந்தது. 

எமது வீட்டின் கழுவுநீர் போகும் குழாய் நீர் இருக்கும் இடத்துக்கு வந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது பாம்பு. 

பாம்பு என்ற சத்தத்தில் என் உம்மாவும் தாத்தாவும் வெளியே வந்து விட்டனர். என்ன பாம்பு என்ற வாக்குவாதம் நடக்கிறது. 

உம்மாவும் தாத்தாவும் நல்ல பாம்பு (நாகம்) என்று சொல்ல, நான்.."இல்லை.... சாரைப்பாம்பு" என்கிறேன். 

பாம்பை அடிக்க திட்டம் நடக்கிறது. நான்.. "அது சாரைப்பாம்பு போகட்டும்" என்கிறேன். என் பேச்சு எடுபடவில்லை. 

என் கணவரை அழைக்க அவரும் வந்து பார்த்துவிட்டு, "அது சாரைப் பாம்பு விடுங்கோ" என்கிறார். 

அடிக்க திட்டம் நடக்க பாம்பு ஓடி விட்டது. 

"உம்மி! இந்த பாம்பு படம் எடுக்குமா?,  

பாம்பு திரும்பி வருமா?, 

அது எங்க போன?, 

அதுக்கு ஊடு இருக்கா? 

பாம்பு சட்ட கழட்டுறா?

என்று அன்றைய நாள் முழுக்க பாம்பு பற்றிய கேள்விகளேயே மகள் கேட்டுக் கொண்டிருந்தாள். என்னிடமும் சில கேள்விகளுக்கு விடை இல்லை. 

பாம்பு பற்றி எச்சரித்து அவளை கவனமாக விளையாட சொன்னேன். 

எமது நாட்டில் பாம்புக்கடி உட்பட விசர்கடிகளுக்கு மருந்து தட்டுப்பாடு உள்ள இக்காலத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம் படைத்தவன் கிருபையால். 


- ஜெம்ஸித் -

   15.07.2022

Comments

Popular posts from this blog

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

மாட்டு வண்டியிலே! (Cart Jurney)