மாட்டு வண்டியிலே! (Cart Jurney)

மாட்டு வண்டியில் சென்ற அனுபவம் உங்களுக்கும் உண்டா?

என் சிறு வயதில் அதாவது 10 வயதுக்குட்பட்ட காலப் பகுதியில் என் உம்மும்மா வீட்டிலும் வாப்பும்மா வீட்டிலும் மாட்டு வண்டிகள் இருந்தன. 

எங்கள் ஊர் பாஷையில் மாட்டுக் கரத்தை என்றே அழைப்போம். மாட்டு வண்டியில் ஒற்றை, இரட்டை நாம்பன் வண்டிகள் காணப்படும். அபாரமான பொருட்களை ஏற்றியிறக்க இரட்டை நாம்பன் பயன்படும். 

என் வாப்பும்மா வீட்டில் ஒரு பெரிய வெள்ளை நாம்பன் மாடு கட்டப்பட்ட கரத்தை இருந்தது. அதில் நாங்கள் ஏறி பயணம் செய்த நினைவுகள் எனக்கில்லை. எனினும் தோட்டத்தில் தேங்காய் பறிக்கும் போது அவற்றை ஏற்றி வருவதற்கும் விறகுகளை ஏற்றி வருவதற்கும் என் அப்பாவின் (வாப்பாவின் வாப்பா)  பயணங்களுக்கும் அதனைப் பயன்படுத்திய நினைவுகளே என்னுள் ஊசலாடுகின்றன. 

சிறு வயதில் எங்கள் அப்பாவைக் கண்டாலே ஒருவிதப் பயம் எங்களுக்கு... அதனாலோ என்னவோ கரத்தையை நெருங்கிய அனுபவங்கள் எனக்கில்லை. 

உம்மும்மா வீட்டிலும் பெரிய வெள்ளை நாம்பன் கறுத்த நாம்பன் மாடுகளைக் கொண்ட ஒற்றை நாம்பன் கரத்தை காணப்பட்டது. அங்கு முக்கியமாக தேங்காய் வியாபாரம் நடைபெற்றதனால் தேங்காய்களை ஏற்றி இறக்க கரத்தை பயன்பட்டது. அத்தோடு வயலிலிருந்து நெல் அறுவடைக் காலங்களில் நெல்லை வீட்டுக்கு கொண்டு வரவும் வைக்கோல், விறகு என்பவற்றைக் கொண்டு வரவும் முக்கியமான போக்குவரத்து சாதனமாக கரத்தை பங்களிப்புச் செய்தது. 

என் சிறு பிராயத்தின் அதிகளவான நாட்கள் என் உம்மும்மா வீட்டில் கழிந்ததனால் கரத்தைகளில் ஏறி ஆசைக்காக அங்குமிங்கும் சென்ற நினைவுகள் மறக்க முடியாதவை. பெரிய தூரம் என்று எங்குமே கரத்தையில் சென்றதில்லை. 

என் உம்மும்மா வீட்டு வளவு பெரிய பரப்பைக் கொண்டது. நான்கு ஏக்கர் காணியின் நடுவில் கம்பீரமாகத் தோற்றமளித்த வீடுகளில் என் உம்மும்மா வீடும் முக்கியமானது. எனவே வீட்டுக்கும் வீதிக்கும் இடையே சற்று நெடுந்தூரம் காணப்படும். கரத்தை எங்காவது செல்லத் தயாராகும் போது நானும் அதில் ஏறிக் கொண்டு வருவேன். வீதியை அடையும் போது கரத்தையிலிருந்து இறக்கப்படுவோம். பின்னர் ஓட்டமாக உம்மும்மா வீட்டுக்கு வந்து வருவோம். இந்தப் பயணம் அங்கிருக்கும் நாட்களில் எல்லாம் நடக்கும். இதில் சில போது என் மாமாவின் பிள்ளைகளும் இணைந்து கொள்வர். அப்போது படு குஷியாக கூத்தும் கும்மாளமுமாக இருக்கும். 

சிறு வயதில் கரத்தைப் பயணம் அலாதியான பசுமையான நினைவாகவே உள்ளது. கரத்தையில் பயணம் செய்தாலும் நாம்பன் மாடுகளுக்கு நான் பயந்து நடுங்குவேன். நாம்பனுக்கு மூர்க்கணம் போடப்பட்டிருக்கும். கரத்தையின் சில்லுகள் கழன்று விழுந்து விடுமோ என்று பயந்த நாட்களை நினைத்து இப்போது சிரிப்பாக உள்ளது. 

கரத்தையில் ஏறும் போதும் ஒரு வித பயம் இருக்கும். மாடு அங்குமிங்கும் அசையும் போது கரத்தையும் ஆடும். கரத்தையில் பயணிக்கும் போதும் ஒரு வித ஆட்டம் இருக்கும்.  கரத்தையில் ஏறும் போது கரத்தையைப் பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். அல்லது உள்ளிருக்கும் ஒருவரின் கை பலத்துடன் ஏற வேண்டும். 

உம்மும்மா வீட்டுக்கு அந்நாட்களில் அடிக்கடி வேறு ஆட்களது கரத்தைகளும் வந்து போகும். அவை தேங்காய்களை ஏற்றிக் கொண்டு வரும். பிற்பட்ட காலங்களில் குபோட்டா, ட்ரெக்டர் வாகனங்களின் வருகை மாட்டுக் கரத்தைகளின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து கரத்தைகளைக் காணாமலே ஆக்கி விட்டிருந்தது. எனினும் எமது நாட்டின் கிராமிய  சுற்றுலாத் தளங்களில் வெளிநாட்டவர்களின் பொழுது போக்குக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

நாட்டின் எரிபொருள் நெருக்கடி மீண்டும் கரத்தைகளின் வருகையை தூண்டி விட்டுள்ளது. முகப் புத்தகத்தில் (Face Book) ஓரிரண்டு கரத்தைகளின் பயன்பாட்டைக் காண முடிந்தது. 

ஹஜ் பெருநாளுக்கு ஒரு வாரம் இருக்கும் போது நானும் பிள்ளைகளும் ஹபியும் வீட்டு முன் வராந்தாவில் இருந்து ரம்புட்டான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது வீதியில் பெரும் ஆரவாரத்துடன் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தோம். புதிதாக தயார்படுத்தப்பட்ட மாட்டு வண்டியொன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. 

நானும் ஹபியும் ஆர்வ மேலீட்டால் "அது தான் கரத்தை" என்று மகள் மனாளுக்கு ஆசையாகக் காட்டினோம். கரத்தை பறந்து விட்டது. 

"உம்மி நாங்களும் கரத்தை ஒன்டு வாங்குவமா"? என்கிறாள் மனாள்.

"அது வாங்குறது கஷ்டம்", 

"எதுக்கு?" என்கிறேன் நான்.

"சில்ரன் பாக் போக உம்மி" என்கிறாள் அவள். 

பிள்ளையின் ஆழ் மனதின் ஆசை. பெட்ரல் இல்லாததன் வலி அவளுள். கரத்தை தான் தீர்வு என்கிறது அவள் பிஞ்சு மனம். 

"ஹயருக்கு வருவாங்களோ தெரியா" என்கிறேன் நான் ஹபியைப் பார்த்து. 

காலத்தின் கோலத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவதா? கவலைப்படுவதா? என்று தெரியவில்லை. 

- ஜெம்ஸித் -

  14.07.2022


Comments

Popular posts from this blog

ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)

சாரைப்பாம்பு! (Rat Snake)