ஹஜ்ஜுப் பெருநாளும் குர்பானியும் ( Haj Festival and Kurbaani)
ஹஜ்ஜுப் பெருநாள்!
அதுவே தியாகத் திருநாள்!
ஹஜ் பெருநாள் என்றாலே நபி இப்றாஹிம், நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் குர்பானி அதில் விசேடமானது. என் சிறு பராயங்களில் எங்கள் ஊரில் குர்பானி பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட முறைமைகள் காணப்படவில்லை.
அதனால் குர்பானியும் ஒழுங்காக அனைவருக்கும் போய்ச் சேராது. ஏனெனில் அன்று ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தத்தமது குர்பானிகளை நிறைவேற்றினர். பங்குகளை தாம் விரும்பியோருக்கு பங்கிட்டனர். இதனால் குர்பானிகள் சிலருக்கு தேவைக்கு அதிகமாகவும் சிலருக்கு குறைவாகவும் இன்னும் சிலருக்கு கிடைக்காதும் இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு. எங்கள் குடும்பத்தில் அல்லது அக்கம் பக்கத்தில் யாராவது குர்பானி கொடுத்தாலே எங்களுக்கும் கிடைக்கும்.
இந்த நடைமுறையே எமது ஊரில் தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. எனினும் கடந்த இரண்டு வருடங்களாக இம்முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு குர்பானி அனைவருக்கும் சமமான முறையில் பங்கீடு செய்யும் முறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பள்ளிவாசல் நிர்வாகம் குர்பானியைப் பொறுப்பெடுத்து குர்பானி கொடுக்க விருப்பமுடையவர்களை வருட ஆரம்பத்திலேயே பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்கிறது.
இதன் மூலம் தனியாக குர்பானி கொடுக்க முடியாதவர்கள் கூட பங்குதாரர்களாக இணைந்து கொள்ளும் வாய்ப்பை பள்ளிவாசல் நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்தது. ஏழை மக்களுக்கும் இது பேரதிஷ்டமாக அமைந்தது. தமது சக்திக்குட்பட்ட சிறு தொகைப் பணத்தை மாதா மாதம் அல்லது ஒரே முறையில் செலுத்த முடியும். இதனால் ஊரில் குர்பானி பங்குதாரர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமன்றி குறிப்பிட்ட பள்ளிவாசல் நிர்வாகத்திற்குட்பட்ட அனைவருக்கும் சரிசமமாக எந்த பாரபட்சமுமின்றி குர்பான் பங்குகள் வழங்கப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ். இந்நடைமுறை தொடர வல்ல நாயன் அருள்பாலிக்கட்டும்.
இவ்வருட ஹஜ் பெருநாள் குர்பானியும் இதே நடைமுறையைப் பின்பற்றியே வழங்கப்பட்டது. ஜும்மா பள்ளிவாசலும் தக்கியா பள்ளிவாசல்களும் இணைந்து இந்நடைமுறையைப் பேணுகின்றன.
எமது ஊர் பரப்பளவிலும் சனத்தொகையிலும் சற்றுப் பெரிதாகையால் இந்த நடைமுறை சாலப் பொருத்தமானதாகவே உள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளும் விலையேற்றங்களும் மக்களை வருத்தெடுத்த போதும் அல்லாஹ்வின் அருளால் குர்பானி சிறப்பாகவே நடைபெற்றது.
எமது நாட்டின் மாடறுப்புத் தடை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், சுற்றறிக்கை வெளியீடு என்பன கடந்த வருட இறுதியில் இம்முறை குர்பானி கொடுப்பதில் பேரலையை ஏற்படுத்தி மக்கள் மனங்களில் பீதியை வரவழைத்து போதும் உலக சட்டத்தை இயற்றியவனின் மாபெரும் வல்லமையை யாரும் தகர்க்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது.
அனைவருக்கும் ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்!
-ஜெம்ஸித்-
10.07.2022
Comments
Post a Comment