தூசு தட்டப்படும் சைக்கிள்கள்! (Bicycles)
எங்கள் வீட்டில் இரண்டு சைக்கிள்கள் இருந்தன. ஒன்று வாப்பாவுடையது. அது முன்னாலும் பின்னாலும் ஒருவர் அமர்ந்து செல்லக் கூடிய பெரிய பெடல் சைக்கிள். மற்றது என் தம்பியுடையது. அதில் சைக்கிள் ஓட்டுபவர் மாத்திரமே செல்ல முடியும். முன்னால் கூடை அமைந்தது.
வாப்பாவின் சைக்கிளே எங்கள் ஆரம்ப கால போக்குவரத்து சாதனம். அதில் நாங்கள் சென்ற பயணங்கள் ஏராளம். வாப்பாவின் சைக்கிளில் பின்னால் லக்கேஜ் ஆசனம் இருக்கும். அதில் தான் நான் ஒரு பக்கத்துக்கு காலைப் போட்டு உட்கார்ந்து கொள்வேன். வாப்பா மிதித்துச் செல்வார். எவ்வளவு தூரம் என்றாலும் மிதிப்பார். மருந்து வாங்கவும் பயணங்கள் போகும் போது பஸ்ஸுக்கும் கூட்டிச் செல்வார்.
நான் உயர் தரம் முடித்து டியுசன் வாரியபொலைக்கு சென்ற போது வாப்பா காலையிலும் மாலையிலும் சைக்களில் கூட்டிக் கொண்டு சென்று பஸ்ஸுக்கு விடுவார். போக வர 5km தூரம்.
வெயிலிலும் மழையிலும் எனக்காக காத்திருக்கும் வண்டி அது. அந்த நினைவுகள் மறக்க முடியாதவை. என் பிள்ளைகளுக்கு சைக்கிள் அனுபவம் கிடைக்க வாய்ப்பில்லை என்று எண்ணியிருந்தேன். ஆனால் அந்தக் காலமும் வந்து விட்டது இன்றைய தொழில் நுட்ப உலகில்.
தூரமான பயணங்கள் செல்லும் போது பின் பக்கம் வலி எடுக்கும். பொறுத்துத் தான் ஆக வேண்டும். வேறு வழி?
எங்கள் வீட்டில் அனைவருக்கும் உழைத்த வண்டி அந்த சைக்கிள். ஓடாத ஓட்டம் இல்லை அந்த சைக்கிள். வாப்பாவும் மிதித்து மிதித்து களைத்துப் போக சைக்கிள் ஓய்வு பெற மோட்டார் வண்டி வந்தது. சைக்கிள் கவனிப்பாரற்றுப் போனது. எனினும் மோட்டார் வண்டியில் கோளாறுகள் ஏற்படும் போது இடையிடையே சைக்கிளும் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தது.
வாப்பாவின் மறைவுக்குப் பின்னரும் கடந்த நான்கு வருடங்களாக வாப்பாவின் நினைவாக சைக்கிளும் எங்களுடனே இருந்தது. நாமும் அதனைப் பாதுகாத்தே வந்தோம்.
முன் வீட்டில் எனது மாமி ஒருவரின் பேரன்கள். பதின்ம வயது நிறைந்த இளம் வாண்டுகள். நடந்தே பயணம் செய்தனர். இடையிடையே யாரிடமாவது சைக்கிள் வாங்கி தம் தேவைகளுக்கு பயன்படுத்தினர். அவர்களைப் பார்க்க என் மனது கவலை கொண்டது.
பயனின்றி வீட்டிலிருக்கும் வாப்பாவின் சைக்கிளை அவர்களுக்கு கொடுத்தால் என்ன? இனி அது யாருக்கு பயன்படப் போகிறது? என என் மூளை கேட்க, வீட்டாருடன் கலந்துரையாடி, மறுநாளே அவர்களின் கைக்கு மாறியது எங்கள் நினைவுப் பேழை.
சம்பவம் நடந்து தற்போது ஆறு மாதங்கள் இருக்கும். எமக்கு அது பெறுமதியான சொத்து. ஆனால் அவர்களுக்கு???
அவர்கள் இரண்டு மாதங்கள் அதில் ஓடினார்கள். பின்னர் மீண்டும் நடை பயணம். விசாரித்துப் பார்த்த போது விற்று விட்டதாகச் சொன்னார்கள். கண்ணில் நீர் முட்டியது. மனதைத் திடப்படுத்திக் கொண்டோம். ஒருவருக்கு கொடுத்த பின் அது அவர்கள் சொத்து. எமக்கு தலையிட உரிமையில்லை என்று. வேறு வழி தான் என்ன? இன்று அந்த சைக்கிளின் பெறுமதி மதிப்பிட முடியாதது.
சென்ற வாரம் தம்பியின் சைக்கிளை தூசி தட்டிக் கொண்டிருந்தேன். இனி பெட்ரல் வராது என்ற ஐயமும் ஊருக்குள் ஓட அவசரத்துக்கு கைகொடுக்கும் தோழனும் அவனே என்ற ஆதங்கத்துடன்.
சைக்கிளை மேலும் கீழும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது, "உம்மி! இதுல நான் எங்கின இருந்து போற?" என்று என் மூன்றரை வயது மகள் கேட்கிறாள். அவக்குத் தான் ரவுன் போக வேணுமே.
"இதுல ஒராள் தான் போக ஏலும்" என்று நான் சொல்ல, அப்படியென்டால் வாப்பா இதுல வரட்டும். நான் ஏன்ட சைக்கிள ரைட் பண்ணிட்டு பின்னால போறன்" என்று தீர்வு சொல்றாள். "உங்கட சைக்கிள்ல ரோட்ல போக ஏலா என்று சொல்லவும், நான் பார்த்து ஓரமா போறன்" என்கிறாள். ஹ்ம்ம்..பேசி முடிக்க ஏலாது.
முன்பெல்லாம் எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள ஊரின் பிரதான வீதி பிஸியாக இருக்கும். நடந்து செல்லக் கூடப் பயம். அடிக்கடி பைக் எக்ஸிடன்ட்கள்.
இன்று வீதிகள் மயான அமைதியாக உள்ளன. இருந்து நின்று ஓரிரு வாகனங்கள். சைக்கிள்கள் மீண்டும் வீதிக்கு வந்து விட்டன. இலங்கையின் பெரும்பாலான வீடுகளில் சைக்கிள்கள் தூசு தட்டப்பட்டுள்ளன. புது சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இரண்டும் அற்றவர்கள் நடை பயணமாகச் செல்வதைக் காண முடிகிறது.
நெகிடமு ஸ்ரீ லங்கா!
- ஜெம்ஸித் -
சைக்கிளின் பரிணாம வளர்ச்சி வீடியோவில் காட்டப்பட்டுள்ளது
👍👍👍
ReplyDeleteSuper
ReplyDelete