தாயின் பயமும் சேயின் வளர்ச்சியும்! (Baby growth and Development Stages)
ஆறு மாதமும் கடந்து விட்டது. என் செல்லக் குட்டி இன்னும் குப்புறப் போடவில்லை. என் பயம் எல்லை தாண்டி விட்டது. காரணம் "இன்னும் குப்புறப் போடவில்லையா?" என்ற உறவுகளின் கேள்விகள்.
முதல் குழந்தை வளர்ப்பு எல்லோருக்கும் பொதுவாக அச்சம் கலந்த எதிர்பார்ப்பைக் கொண்டது என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை.
என் மகளுக்கு தலை நேராக நான்கு மாதங்கள் எடுத்தது. பொதுவாக பிள்ளைகள் நான்கு மாதத்தில் குப்புறப் போடுவார்கள். ஆனால் என் மகள் வளர்ச்சிப் படியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தாமதமாவே செய்தாள்.
யாரும் இன்னும் அது செய்யவில்லையா? இது செய்யவில்லையா? என்று கேட்கும் போது ஒருவித பயம் மனதை வாட்டும். அவ புட்டிப்பால் குடிப்பதனால் ஒவ்வொரு செயற்பாடும் லேட்டாகிறது போல என்று சொல்லி நானே என் பயத்தைப் போக்கிக் கொள்வேன்.
ஏழு மாதத்தில் குப்புறப் போட ஆரம்பித்தாள் என் தங்கம். அப்பாடா நிம்மதி. அதன் பிறகு உட்கார்ந்து விளையாட ஆரம்பித்தாள். ஒன்பதாவது மாதத்தில் பின்னுக்கு ரிவேரஸ் போய் பத்தாவது மாதத்திலிருந்து நன்றாக முன்னோக்கித் தவழ பழகிக் கொண்டாள்.
ஆரம்ப செயற்பாடுகள் பின்னாகப் பின்னாக நடத்தலும் பின்னுக்குப் போய்க் கொண்டே இருந்தது. "மனாள் இன்னும் நடக்குறல்லியா?" என்று கேட்கும் போது கவலை வரும்.
எப்படியோ ஒரு வருடமாகும் போது தனியாக எழும்பி நிற்கப் பழகி தாத்தி நடை பயின்று தனியாக பயமின்றி நடக்க ஆரம்பிக்கும் போது ஒரு வருடமும் மூன்று மாதமும் ஆகிவிட்டது. அப்போது தான் என் நிம்மதிக்குப் பஞ்சமில்லாமல் போனது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், என் மகளின் மேற்கூறிய செயற்பாடுகள் தாமதமாகிய போதும் அவள் பத்து மாதம் இருக்கும் போதே நன்றாக வாக்கியங்களைக் கோர்வை செய்து கதைப்பதில் கிள்ளாடி.
ஒரு வயதுக்கு முன்னரே அவள் கதைத்த நீண்ட வாக்கியம் இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது.
அது ஒரு மழைக்காலம்.
மழையில் குடை பிடித்து வெளியில் செல்வதில் ஒரு விருப்பம் அவளுள்.
வெளியே போகும் போது பாடா (Bata) அணிவதையும் நோட்டமிட்டிருக்கிறாள்.
இவை எல்லாவற்றையும் கோர்வை செய்து, உம்மும்மாவின் இடுப்பில் இருந்தபடி சொன்னாள்:-
"உம்மும்மா என்னய தூக்கிட்டு, பாடாவும் போட்டு, குடையும் பிடிச்சு, மழையில போற" என்றாள்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது அன்று.
பிள்ளைகளின் வளர்ச்சிப் படிமுறைகள் பிள்ளைக்குப் பிள்ளை வித்தியாசமாகிறது. எனினும் அனுபவமின்மையால் முதல் குழந்தை வளர்ப்பில் தாயில் பயம் ஏற்படுவது இயல்பானதே.
எனினும் என் இரண்டாவது மகள் ஒவ்வொரு செயற்பாடுகளையும் உரிய பருவத்தில் செய்து வருகிறாள் என்பது மனநிறைவைத் தருகிறது.
அனுபவமே ஆசான்.
- ஜெம்ஸித் -
17.07.2022
Comments
Post a Comment